உடல்நிலை சரியில்லாத போது விடுப்பு எடுத்தால் நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டும், ஆனால் அதற்குப் பதிலாக வேலை தொடர்பான கவலைகளையே ஊழியர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சமீபத்தில் ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு இது குறித்து விவாதிக்க வழிவகுத்துள்ளது.

அதில், ஒரு ஊழியர் உடல்நிலை சரியில்லாததால் விடுப்பு கேட்டபோது, அவரது மேலாளர் அது “அவசரகால நிலை” இல்லை என்று கூறி, “முடிந்தால் சில மணிநேரம் வேலை செய்ய முடியுமா?” என்று கேட்டுள்ளார். இந்த பதில் அந்த ஊழியரை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தானே விடுப்பு கேட்கிறோம், பிறகு ஏன் வேலை செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்கள் என அந்த ஊழியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இத்தகைய சூழலில் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவது குறித்து பல ஊழியர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு பணியிடத்திலும் காலக்கெடு  மற்றும் முக்கியமான திட்டங்கள் இருப்பது உண்மைதான், ஆனால் “எல்லாமே முக்கியமான காலம்” என்று இருந்தால், ஊழியர்கள் எப்போதுதான் விடுப்பு எடுப்பது என்று அவர்கள் வருத்தத்துடன் கேட்கின்றனர்.

இதற்குப் பதிலளித்த பல பயனர்கள், “உடல்நிலை சரியில்லை என்றால் விடுப்பு எடுப்பதில் தயக்கம் காட்டாதீர்கள். வேலையை விட உடல்நலமே முக்கியம்,” என்று அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், விடுப்பு கேட்டால் மறுக்க வாய்ப்பிருப்பதால், அனுமதி கேட்காமல், “உடல்நிலை சரியில்லை, இன்று விடுப்பு எடுக்கிறேன்” என்று மட்டும் தெரிவித்துவிட்டு பணியிலிருந்து விலகி இருப்பதே சிறந்தது என்றும் பலரும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.