பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அதர்பெல் பாலத்தின் அருகே ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. திராட்சை பழங்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் அடியில் இருந்த ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த டன் கணக்கிலான திராட்சை பழங்கள் ஆற்று நீரில் கொட்டி, வெள்ளம்போல மிதக்கத் தொடங்கின. லாரியில் இருந்த ஓட்டுநரும் கிளீனரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால், விபத்து நடந்த செய்தியை விட, அதன் பின் நடந்த விஷயம்தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. விபத்து நடந்ததைக் கேள்விப்பட்ட சுற்றுவட்டார கிராம மக்கள், அடித்துப் பிடித்து ஆற்றுக்கு ஓடி வந்தனர்.

அவர்கள் கையில் கிடைத்த பக்கெட், கூடைகள், சாக்கு மூட்டைகள் என எதை எதையோ எடுத்துக்கொண்டு ஆற்றில் இறங்கி திராட்சைகளை அள்ளத் தொடங்கினர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை போட்டி போட்டுக்கொண்டு இடுப்பளவு தண்ணீரில் இறங்கி திராட்சை வேட்டையாடினர். போலீசார் வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்குள், பெரும்பாலான திராட்சைகளை மக்கள் அள்ளிச் சென்றுவிட்டனர். இது குறித்த வீடியோக்கள் இப்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.