ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில், வாகனச் சோதனையின் போது லாரி ஓட்டுநரைத் தாக்கிய வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஜன்கர் பகுதியில் பணியில் இருந்த சுரேஷ் குமார் விஷ்னோய் என்ற அதிகாரி, உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த எஹ்சான் அகமது என்ற இளம் ஓட்டுநரின் செல்போனைப் பிடுங்கியதோடு, அவரைத் தனது தலையாலேயே முட்டித் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஓட்டுநரின் கண் அருகே பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. தான் நோன்பு இருப்பதாகவும், தன்னிடம் அநாகரிகமாக நடக்க வேண்டாம் என்றும் ஓட்டுநர் கெஞ்சிய போதிலும், அந்த அதிகாரி தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

“>

இந்தக் கொடூரச் சம்பவம் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வீடியோவில் ஓட்டுநர் ரத்தக் காயங்களுடன் இருப்பதும், அதிகாரியின் அநாகரிகமான நடத்தையும் தெளிவாகத் தெரிந்ததையடுத்து, பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை ஆணையர் புருஷோத்தம் சர்மா, சம்பந்தப்பட்ட ஆய்வாளர் சுரேஷ் விஷ்னோயை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தற்போது அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அதிகாரிகளின் இத்தகைய அத்துமீறல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.