இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் நிலவும் கட்டுக்கடங்காத வீட்டு வாடகை மற்றும் சொத்து விலைகள் குறித்து, துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஸாகி மோக்ரா வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்ட ஸாகி மோக்ரா, அங்குள்ள நிலவரத்தைக் கண்டு வியந்து போயுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “உலகின் மிகவும் விலையுயர்ந்த நகரங்களில் ஒன்றாக மும்பை உள்ளது. லண்டனின் மையப்பகுதியை விட மும்பையின் சில இடங்களில் ஒரு சதுர அடி நிலத்தின் விலை அதிகமாக உள்ளது. ஆனால், அவ்வளவு கோடி ரூபாய் கொடுத்து ஒரு அபார்ட்மென்ட் வாங்கினாலும், கட்டிடத்தை விட்டு வெளியே கால் வைத்தால் அங்குள்ள சூழல் நாம் கொடுத்த பணத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் மோசமாக உள்ளது,” எனச் சாடியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Zaki Mogra | UAE Off Plan (@zaki.offplan)

துபாய் நகரத்துடன் மும்பையை ஒப்பிட்டுப் பேசிய அவர், துபாய் நகரம் அங்கு வாழும் மக்களுக்காகவே செதுக்கப்பட்டது போன்ற உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளதாகப் புகழ்ந்துள்ளார். “துபாயில் மெட்ரோ, பூங்காக்கள், கடற்கரைகள், பள்ளிகள் மற்றும் சாலைகள் என அனைத்தும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் மும்பையில் நிலைமை தலைகீழாக உள்ளது,” என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

ரியல் எஸ்டேட் முதலீட்டைப் பொறுத்தவரை துபாய் மிகவும் எளிமையானது என்று கூறியுள்ள அவர், “துபாயில் ஒரு வீட்டை வாங்க முழுத் தொகையையும் ஆரம்பத்திலேயே கட்ட வேண்டியதில்லை. வட்டியே இல்லாமல் 5 முதல் 6 ஆண்டுகள் வரை தவணை முறையில் செலுத்தும் வசதிகள் உள்ளன. இத்தகைய சிறப்பான வாழ்க்கை முறை மற்றும் கட்டமைப்பு வசதிகள் வேறெந்த நாட்டிலும் கிடைப்பது அரிது” எனத் தெரிவித்துள்ளார்.

மும்பை ரியல் எஸ்டேட் சந்தை இவ்வளவு விலையுயர்ந்ததாக இருப்பது ஏன்? என்ற கேள்வியுடன் அவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவிற்கு, மும்பை வாசிகள் பலரும் ஆதரவாகவும், சில பேர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் சொத்து விலையை மட்டும் உயர்த்துவது நியாயமா? என்ற கேள்வி தற்போது வலுத்துள்ளது.