டெல்லி அணிக்கு 235 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்..

2024 ஐபிஎல்லின் 20வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி மும்பை அணியின் துவக்க வீரர்களா களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். இதனால் மும்பை அணி பவர் பிளேவில் 75 ரன்கள் குவித்தது.

இதையடுத்து ரோகித் சர்மா அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்சர் படேலின் 7வது ஓவரின் கடைசி பந்தில் போல்ட் ஆனார். ரோகித் சர்மா 27 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 49 ரன்கள் எடுத்தார். இதையடுத்து காயத்தில் இருந்து மீண்டு வந்த சூர்யகுமார் யாவும் நோர்க்கியாவின் ஓவரில் டக் அவுட் ஆனார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 23 பந்துகளில் 42 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். பின் திலகர்மா 6 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். தொடர்ந்து நோர்கியா வீசிய 18 ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 39 ரன்களில் அவுட் ஆனார்.

இதையடுத்து ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் டிம் டேவிட் கைகோர்த்தனர். இறுதியில் நோர்க்யாவின் கடைசி ஓவரில் ஷெப்பர்ட் சிக்ஸ், பவுண்டரி என அடித்து ரசிகர்களுக்கு விருந்து அளித்தார். அதன்படி அந்த ஓவரில் 4,6,6,6,4,6 என 32 ரன்கள் விளாசினார்.  இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20  ஓவர் முடிவில் 234 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது. டிம் டேவிட் 21 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 45 ரன்களுடனும், ஷெப்பர்டு 10 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 39 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக அக்சர் படேல் மற்றும் நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

மும்பை அணி 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் தற்போது பந்து வீசி வருகிறது. தற்போது டெல்லி அணி பேட்டிங் ஆடி வருகிறது.