திருச்சி கிழக்குக்கு முதலமைச்சர் விஜய் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்துள்ள நிலையில் ஏராளமானோர் வந்துள்ளனர். அந்த வகையில் அயோத்தி பட்டினம் பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் மிகுந்த வேதனையோடு முதல்வர் விஜயை சந்தித்து முக்கிய கோரிக்கை ஒன்றினை வைக்க வந்துள்ளார். அவரது பெயர் பவித்ரா அவரது கணவன் பெயர் ஜெயசீலன். அவரது இரண்டரை மாத குழந்தையின் பெயர் வருண் கிருஷ்ணன். அந்தப் பெண் கூறும்போது, நான் என்னுடைய அம்மா அப்பா பேச்சை கேட்காமல் காதலித்தவரை கல்யாணம் செய்து கொண்டேன்.

அவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணமாகி அவர்கள் ஒரு வருடம் மட்டுமே வாழ்ந்து விட்டு பிரிந்து சென்றுள்ளனர். இதனை அவர் என்னிடமிருந்து மறைத்த நிலையில் தற்போது வரதட்சணை கொடுமை செய்ததோடு என்னுடைய இரண்டரை மாத குழந்தையையும் பிடுங்கி வைத்துள்ளனர். குழந்தை எங்கே இருக்கிறான் என்று கூட தெரியவில்லை. அவனைக் யாருக்காவது கொடுத்துவிட வேண்டும் என்று கூறினார்கள். என் குழந்தையை யாராவது வைத்திருந்தாலோ அல்லது பார்த்திருந்தாலோ தயவு செய்து கூறுங்கள்.

நான் ஏன் இன்னும் சாகாமல் உயிருடன் இருக்கிறேன் என்று கூட எனக்கு புரியவில்லை, ஆனால் ஒருமுறையாவது என்னுடைய குழந்தையை பார்த்துவிட வேண்டும். என் மாமியாரும் கணவனும் ரொம்ப வரதட்சனை கொடுமை செய்வதோடு என்னிடமிருந்து நிறைய வாங்கிவிட்டனர். தற்போது நான் மோசமான ரவுடிகள் நிறைந்த பகுதியில் ரோட்டில் தான் படுத்து தூங்குகிறேன்.

எனக்கு பாதுகாப்பே கிடையாது. நான்கு நாட்களாக நான் சாப்பிடவில்லை. தற்போது பழைய பஸ் ஸ்டாண்டில் பாத்ரூம் கழுவி 300 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு அதை வைத்து தான் முதலமைச்சரை சந்திக்க வந்துள்ளேன். மேலும் என்னுடைய பிரச்சனையை சரி செய்ய முதலமைச்சர் விஜய் தான் உத்தரவிட வேண்டும் என கதறி அழுதபடி அந்த பெண் கூறினார்.