பீகாரின் பாட்னாவில் நடந்த ஒரு ‘விசித்திரமான’ போக்குவரத்து நெரிசல் இப்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. டிராபிக் சிக்னல் இல்லை, விபத்தும் நடக்கவில்லை, ஆனால் கிலோமீட்டர் தூரத்திற்கு வண்டிகள் நிற்கின்றன. காரணம் என்ன தெரியுமா? ஒரு பெண்மணி ஷாப்பிங் செய்ய வேண்டும் என்பதற்காக, தனது காரை நடுரோட்டிலேயே நங்கூரம் பாய்ச்சியது போல நிறுத்திவிட்டுச் சென்றதுதான்.
பாட்னாவின் எஸ்கே பூரி (SK Puri) பகுதியில் நடந்த இந்தச் சம்பவத்தை ஒரு நபர் வீடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளார். அதில், “முன்னால் நிற்கும் கார் சிக்னலில் நிற்கிறது என்று நினைக்கிறீர்களா? இல்லை! அந்தப் பெண்மணி ஷாப்பிங் செய்யச் சென்றுள்ளார். டிரைவர் காருக்குள்ளேயே இருக்கிறார். ஒரு போலீஸ் செக்போஸ்ட் முன்னாலேயே இவ்வளவு தைரியமாக காரை நிறுத்தியிருக்கிறார்கள்” என ஆதங்கத்துடன் விவரிக்கிறார்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இது என்னப்பா அராஜகம்!” எனப் பொங்கி எழுந்துள்ளனர்.
