ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பிரபல இனிப்பு கடை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கத்தால் செய்யப்பட்ட விசேஷ இனிப்பை அறிமுகம் செய்துள்ளது.

‘சுவர்ண பிரசாதம்’ எனப்படும் இந்த இனிப்பு முழுவதுமாக 24 காரட் சுத்தமான, உண்ணக்கூடிய தங்கத்தால் மூடப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பில் குங்குமப்பூ, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கடை உரிமையாளர் தெரிவித்ததாவது: “இந்த இனிப்பு முழுக்க 24 காரட் தங்க படலத்தால் அலங்கரிக்கப்பட்டது. வாங்குபவர்களுக்கு இது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மரப்பெட்டியில் வழங்கப்படுகிறது,” என்றார்.

இந்த ஆடம்பர இனிப்பின் விலை ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர, அந்த கடையில் 24 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பிஸ்தா லோஞ்ச் (கிலோ ரூ.7,000), காஜு கட்லி (கிலோ ரூ.3,500) மற்றும் லட்டு (கிலோ ரூ.2,500) போன்ற பிற விலையுயர்ந்த இனிப்புகளும் விற்பனைக்கு உள்ளன.

தீபாவளியை முன்னிட்டு செல்வந்தர்களும், பெருநிறுவனங்களும் பரிசளிப்பதற்காக தேர்ந்தெடுக்கக்கூடிய புதிய ஆடம்பர விருப்பமாக இது மாறியுள்ளது. மேலும் பாரம்பரிய இந்திய இனிப்புகளை ஆடம்பரத்துடனும் ஆரோக்கியத்துடனும் இணைக்கும் புதுமையான முயற்சியாக ‘சுவர்ண பிரசாதம்’ கருதப்படுகிறது.