தன் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை, அவரது மகனே தனது உறவினருடன் சேர்ந்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் லக்னோவின் பிஜ்னோர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த சூரஜ் என்பவருக்கும், குற்றம் சாட்டப்பட்ட அனில் யாதவின் தாய்க்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதல் உறவு இருந்து வந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, தனது தாயும் சூரஜும் நெருக்கமாக இருந்ததை நேரில் பார்த்த அனில் யாதவ் அதிர்ச்சியடைந்துள்ளார். சூரஜை பலமுறை எச்சரித்தும் அவர் கேட்காததால், அவரைத் தீர்த்துக்கட்ட அனில் முடிவு செய்தார்.
கடந்த மே 8-ஆம் தேதி இரவு, அனில் யாதவ் தனது 9-ஆம் வகுப்பு படிக்கும் மைனர் உறவினருடன் சேர்ந்து ஒரு சதித்திட்டத்தைத் தீட்டினார். மது அருந்தலாம் என சூரஜை ஆசை வார்த்தை கூறி ஒதுக்குப்புறமான மாந்தோப்பிற்கு வரவழைத்தனர். சூரஜ் போதையில் இருந்தபோது, மறைத்து வைத்திருந்த கோடரியால் அவரது முகத்தில் சரமாரியாக வெட்டியுள்ளனர். அவர் தப்பிக்க முயன்றபோது, செங்கற்களால் தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தனர்.
கொலை செய்த பின், அனில் யாதவ் தனது ரத்தக் கறை படிந்த ஆடைகளைத் துவைத்துவிட்டு, எதுவுமே நடக்காதது போல ஒரு திருமண விழாவிற்குச் சென்றுள்ளார். மறுநாள் போலீசார் விசாரணை நடத்தியபோது, சந்தேகம் வராமல் இருக்க போலீசாருடனேயே இருந்துள்ளார். இருப்பினும், 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சூரஜின் ஐபோனைத் திருடிச் சென்ற அனில் யாதவை செல்போன் சிக்னல் மூலம் கச்சிதமாகக் கைது செய்தனர்.
