பஞ்சாப் லூதியானா மாவட்டத்திலுள்ள நிதி நிறுவனத்தில் சென்ற 10-ம் தேதி கொள்ளை சம்பவம் அரங்கேறியது. பட்டப்பகலில் நிதி நிறுவனத்திற்குள் நுழைந்த அயுத ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்களை மிரட்டி 8 கோடியே 49 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான கொள்ளையர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மந்தீப் கவுர் என்ற பெண்ணும் அவரது கணவர் ஜெஸ்வீந்தர் சிங்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. அதன்பின் இத்தம்பதியை கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டினர். தம்பதியினர் இருவரும் நேபாளம் தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து நாட்டை விட்டு வெளியேற முடியாதபடி லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மேலும் வித்தியாசமான திட்டம் தீட்டிய காவல்துறையினர் வழிபாட்டு தலம் ஒன்றில் பக்தர்களுக்கு இலவசமாக பழஜூஸ் வழங்க தொடங்கினர். 10 ரூபாய்கு வழங்கப்படும் ஜூசை பக்தர்களுக்கு காவல்துறையினர் இலவசமாக வழங்கினர். இந்நிலையில் பஞ்சாப்பில் 8 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துவிட்டு ஹிம்ஹண்ட் ஷாகிப் மத வழிபாட்டு தலத்திற்கு வந்திருந்த மந்தீப் கவுர் மற்றும் அவரது கணவர் ஜெஸ்வீந்தர் சிங்கை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அவர்கள் இருவரும் போலீஸ் அமைத்த இலவச பழஜூஸ் வழங்கும் பகுதிக்கு வந்து 10 ரூபாய் மதிப்புள்ள பழ ஜூசை இலவசமாக பெற்றுச் சென்றனர். இதை பார்த்த காவல்துறையினர் இருவரையும் பின் தொடர்ந்து சென்றனர். அதனை தொடர்ந்து மத வழிபாடு முடித்துவிட்டு வெளியே வந்த மந்தீப் கவுர் மற்றும் அவரது கணவர் ஜெஸ்வீந்தர் சிங்கை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.