உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், சமூக ஊடகப் பிரபலமான மான்சி என்ற இளம் பெண் தனது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த சுனில் குமார் வர்மா என்பவரின் மருமகளான மான்சிக்கும், லக்னோவைச் சேர்ந்த பிரபல சமூக ஊடக இன்ஃப்ளூயன்சரான சாகர் ராஜ்புத் (இன்ஸ்டாகிராமில் 7.93 லட்சம் ஃபாலோயர்கள் கொண்டவர்) என்பவருக்கும் கடந்த 2024 டிசம்பர் 9 அன்று திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின் போது பெண்ணின் குடும்பத்தினர் தங்கள் சக்திக்கு ஏற்ப 7 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கியுள்ளனர். இருப்பினும், கூடுதல் வரதட்சணையாக சொகுசு கார் கேட்டு கணவர் சாகர் ராஜ்புத், மாமனார் ராஜேஷ், நாத்தனார்கள் மற்றும் உறவினர்கள் மான்சியைத் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மான்சி பலமுறை தனது பெற்றோருக்கு தொலைபேசி வாயிலாகத் தெரிவித்து அழுதுள்ளார். பலமுறை நேரில் வந்து சமாதானம் பேச முயன்றபோதிலும், மாமியார் வீட்டின் வரதட்சணைக் கொடுமை குறையவில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை அன்று மான்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், வரதட்சணை ஆசையில் கணவர் குடும்பத்தினரே மான்சியைக் கொலை செய்துவிட்டு, தற்கொலை போல நாடகமாட உடலைத் தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக பெண்ணின் வீட்டார்  குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் சந்தோஷ் ஆர்யா கூறுகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் புகாரின் பேரில் கணவர் சாகர் உட்பட 6 பேர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மான்சியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மருத்துவ அறிக்கை மற்றும் அறிவியல் பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.