குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள ஒரு  அடுக்குமாடி குடியிருப்பில், சனிக்கிழமை அன்று ஷில்பா என்ற 40 வயது பெண் தலையில் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அவரது கணவர் அல்தாஃப் லாலானியை, போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து ராஜ்கோட் குற்றப்பிரிவு ஏசிபி பரத் பாசியா கூறுகையில், பல்கலைக்கழக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த கொடூரக் கொலை நிகழ்ந்ததாகவும், குற்றவாளியைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவிரத் தேடுதலுக்குப் பின் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். கைதான அல்தாஃப் லாலானி மீது ஏற்கனவே இரண்டு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தம்பதியினருக்கு இடையே கடந்த 15 நாட்களாக நீடித்து வந்த குடும்பத் தகராறே இக்கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. கடந்த மே 13 அன்று வீட்டிற்கு வந்த அல்தாஃப், ஜீத்து என்பவருடன் உள்ள தகாத உறவு குறித்து தனது மனைவி ஷில்பாவிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை ஜீத்துவின் மனைவி அல்தாஃபின் மளிகைக் கடைக்கு வந்து, ஷில்பா தனது கணவருக்கு அனுப்பிய செல்போன் குறுஞ்செய்திகளை காட்டி சண்டையிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அல்தாஃப், தனது கடையிலிருந்த சுத்தியலை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று மனைவி ஷில்பாவின் தலையில் ஓங்கி அடித்துக் கொலை செய்துள்ளார். இத்தம்பதியரின் மகன் மற்றும் மகள் இருவரும் வெளியூரில் தங்கிப் படித்து வரும் நிலையில், குடும்பத் தகராறில் தாய் கொல்லப்பட்டதும், தந்தை கைதானதும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.