தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாபநாசம் தாலுகா உடையார் கோவில் கிராமத்தில் ராஜவேலு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் பைப் பதிப்பதற்காக தனியார் வங்கியில் ரூ.4 லட்சம் கடன் கேட்டுள்ளார். இந்நிலையில் வங்கி தரப்பில் நில மதிப்பு சான்று கேட்டுள்ளனர். இதனையடுத்து ராஜவேலு பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். நில மதிப்பு சான்றிதழை பெற்று தருவதாக கூறி தாசில்தார் அலுவலகத்தில் உதவியாக பணியாற்றிய கல்யாண சுந்தரம் என்பவர் ரூ.5000 லஞ்சம் கேட்டுள்ளார்.

இந்நிலையில்  ராஜவேலு தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசில் கடந்த டிசம்பர்3, 2013 -ஆம் ஆண்டு  புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கல்யாண சுந்தரத்தை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, கல்யாண சுந்தரத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் 4000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்துள்ளார்.