ரெடிட் சமூக வலைத்தளத்தில் சீனியர் பேக்கெண்ட் டெவலப்பர் (Senior Backend Developer) ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு, கார்ப்பரேட் வேலைகளில் ஏற்படும் மன அழுத்தம் சம்பளம் மற்றும் ‘வாழ்க்கை ஸ்திரத்தன்மை’ குறித்த விவாதங்களை மீண்டும் இணையத்தில் கிளப்பியுள்ளது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதிக சம்பளம், பாதுகாப்பான வேலை, சிறந்த தொழில்நுட்பப் பதவி என அனைத்தும் கச்சிதமாகத் தெரிந்தாலும், அந்த வேலைக்கு பின்னால் இருக்கும் நிஜ வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதை அவர் ஓப்பனாகப் பகிர்ந்துள்ளார். “என் டெவலப்பர் வேலையை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன், எனக்கு கொஞ்சம் அட்வைஸ் வேணும். இதைப் பற்றி ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருக்கேன்…” எனத் தொடங்கும் அவரது பதிவு, அதிக சம்பளம் கொடுத்தாலும் அர்த்தமில்லாமல் தோன்றும் ஒரு வேலையில் நீடிப்பதால் ஏற்படும் தனிமை மற்றும் மன உளைச்சலை விவரிக்கிறது.
ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் சீனியர் பேக்கெண்ட் ரோலில் இருக்கும் அந்த டெவலப்பர், வருடத்திற்கு சுமார் 30 முதல் 35 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இருப்பினும், இந்த இமாலய சம்பளம் கூட இப்போது அவருக்கு வேலையின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். தினமும் ஒரே மாதிரியான சலிப்பூட்டும் வேலைகள், ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் வருகையால் கோடிங் எழுதுவதில் இருந்த சுவாரஸ்யம் குறைந்திருப்பது போன்ற காரணங்களால் அவர் சோர்ந்து போயுள்ளார்.
இதுமட்டுமின்றி, குர்கானில் தனியாக வசிப்பதால் நீண்ட நேர வேலைக்கு பிறகு ஒரு வெறிச்சோடிய வீட்டிற்குள் முடங்குவதும், சமூக வாழ்க்கை மற்றும் மன அமைதி இல்லாமல் போவதும் அவரது சோர்வை பல மடங்கு அதிகரித்துள்ளது. சிறிய நகரத்தில் இருக்கும் தனது குடும்பத்தினரை மிகவும் மிஸ் செய்வதாகவும், மெட்ரோ நகர வாழ்க்கை முறையிலிருந்து தான் முற்றிலும் விலகிவிட்டதாக உணர்வதாகவும் அவர் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார். பணம் மட்டுமே ஒரு நிம்மதியான வாழ்க்கையைத் தந்துவிடாது என்பதை இந்த டெவலப்பரின் பதிவு நெட்டிசன்கள் மத்தியில் ஆழமாக உணர்த்தியுள்ளது.
