தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்தும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் ஆண்டுக் கட்டணத்தை அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்திற்கு நிகராகக் குறைக்கக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய  பிரிவைச் சேர்ந்த ஹர்ஷ்வர்தன் சிங் என்ற மாணவர் தாக்கல் செய்த மனுவில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் 18.9 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை மிக அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும், ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக உள்ள தங்களைப் போன்ற ஏழை மாணவர்களால் இந்தத் தொகையைச் செலுத்த முடியாது என்பதால் கட்டணத்தை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார். முன்னதாக இந்த மனுவை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து மாணவர் ஹர்ஷ்வர்தன் சிங் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தது. அரசு மருத்துவக் கல்லூரிகள் அரசின் மானிய உதவியுடன் இயங்குவதாகவும், ஆனால் தனியார் கல்லூரிகள் சுயநிதி நிறுவனங்கள் என்பதால் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், தனியார் கல்லூரிகளையும் அரசு இணையான கட்டணத்தை வசூலிக்கும்படி கட்டாயப்படுத்தினால், மருத்துவக் கல்வித் துறையில் அவர்கள் வழங்கும் பங்களிப்பு இல்லாமல் போய்விடும் என்றும், நாட்டின் மருத்துவத் தேவைக்கு மருத்துவர்கள் மிக முக்கியம் என்பதால் இத்தகைய உத்தரவுகள் தனியார் கல்வி நிறுவனங்களை மூடும் நிலைக்குத் தள்ளிவிடும் என்றும் குறிப்பிட்டனர். அத்துடன், கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் உதவித்தொகை  அல்லது அரசு சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, தனியார் கல்லூரிக் கட்டணத்தை அரசுக்கு இணையாகக் குறைக்கக் கோர முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.