
டெல்லி உயர்நீதிமன்றத்தில் விக்கிபீடியா மீது பிரபல ANI செய்தி நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது விக்கிபீடியா தளத்தில் ANI செய்தி நிறுவனம் மத்திய அரசின் பரப்புரை கருவியாக செயல்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது. அதோடு நாடு முழுவதும் உள்ள செய்தி நிறுவனங்களுக்கு போலி செய்திகள் மற்றும் திரிக்கப்பட்ட செய்திகளை வழங்குவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதற்கு தற்போது எதிர்ப்பு தெரிவித்து ANI செய்தி நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
அதில் தங்களைப் பற்றி பொய்யான குற்றசாட்டுகளை சுமத்திய விக்கிபீடியா நிறுவனம் ரூ.2 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி விக்கிபீடியா தளத்திற்கு தன்னுடைய கருத்தை சொல்வதற்கு உரிமை உள்ளது என்று கூறினார். அதோடு ஒரு கருத்தை சொல்வதற்கு முன்பு அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும் எனவும் கூறினார். மேலும் இந்த மனு தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என விக்கிபீடியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்புமாறு கூறிய நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது