ஹரியானா மாநிலத்தின் ரேவாரி நகரில் ஒரு வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அடையாளம் தெரியாத நபர்களால் பட்டப்பகலில் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவருக்கு அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து ரூ.1 லட்சம் கப்பம் கேட்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது. இந்தச் சம்பவம் சிப்த்வாடா பகுதியில் நடந்தது. இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர் நகர காவல் நிலையத்தின் ஜெகன் கேட் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி, சம்பவம் நடந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, புகார்தாரருக்கு ஒரு தெரியாத  எண்ணிலிருந்து ஒருவர் போன் போட்டு  “ஒரு லட்சம் ரூபாய் கொடுக்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்,”
என்று மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில், இரண்டு இளைஞர்கள் பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்குச் செல்வது, அவர்களில் ஒருவரால் பைக்குகளுக்கு மேல் எரியக்கூடிய திரவம் ஊற்றுவது மற்றும் மற்றொருவர் தீ வைப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. அதன்பின் இருவரும் வேகமாக அந்த இடத்தை விட்டு தப்பிச் செல்கின்றனர். எரிந்த வாகனங்கள் — ஒரு அப்பாச்சி மற்றும் ஒரு புல்லட் பைக் — சம்பவ இடத்தில் முழுமையாக சேதமடைந்தன.

 

இந்த சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் விரைவில் பரவியதால், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சம் நிலவுகிறது. இது பற்றி நகர காவல் நிலையப் பொறுப்பாளர் சீமா கூறியதாவது:“தீ வைப்பு மற்றும் கப்பம் கோரிக்கை தொடர்பாக புகார் கிடைத்துள்ளது. சம்பவ இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்தார். மேலும், மிரட்டல் அழைப்புக்கு பயன்படுத்தப்பட்ட மொபைல் எண்ணையும் கண்டறியும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.