சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட 157 கவுன்சிலர்கள், தங்களது சொத்து விவரங்களை இன்னும் மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் அம்பலமாகியுள்ளது. மாநகராட்சி விதிகளின்படி, தேர்தல் முடிந்து 90 நாட்களுக்குள் மேயர், துணை மேயர் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் தங்களது குடும்பத்தின் அசையும், அசையா சொத்துக்கள், கடன்கள் மற்றும் அடமானம் குறித்த முழு விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் மாநில சட்டப்பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர் தாக்கல் செய்த ஆர்.டி.ஐ. மனுவிற்கு சென்னை மாநகராட்சி அளித்துள்ள பதிலில், மொத்தமுள்ள 200 கவுன்சிலர்களில் வெறும் 43 பேர் மட்டுமே இதுவரை முறையாக தங்களது சொத்து விவரங்களைச் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயராகப் பிரியா பொறுப்பேற்ற நிலையில், ஐந்து ஆண்டுகள் கொண்ட இந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்னும் 8 மாதங்களில் நிறைவடைய உள்ளது. அடுத்த உள்ளாட்சித் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள சூழலில், பதவிக்காலம் முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையிலும் மேயர் பிரியா உள்பட 157 கவுன்சிலர்கள் தங்களது சொத்து விவரங்களை இன்னும் ரகசியமாக வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
