மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பாகவே, அந்நாட்டு அரசு சில கடுமையான விதிமுறைகளை விதித்திருந்தது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் (TVK) தொடர்பான எந்தவொரு கொடியோ, துண்டோ அல்லது அடையாளங்களோ நிகழ்ச்சிக்குக் கொண்டு வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் தடையையும் மீறி நேற்று மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் திடீரென தமிழக வெற்றி கழகத்தின் கொடியை உயர்த்திப் பிடித்து தன் ஆதரவைக் காட்டினார். விதிமுறைகளை மீறி கொடியைக் காட்டிய அந்த ரசிகரை, அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாகக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “விஜய் மீதான அன்பு ஒருபுறம் இருந்தாலும், ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்க வேண்டாமா?” எனப் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவம் விழாவிற்கு வந்திருந்த மற்ற ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.