கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அனன்யா ராவ் என்பவர் மருத்துவ மேல் படிப்பை படித்துக் கொண்டே தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 18-ஆம் தேதி அனன்யா தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வதற்காக அனன்யா ராவ் உயரமான பாறை மீது ஏறி நின்றார். அதனை நண்பர்கள் வீடியோ எடுத்தனர். அப்போது அனன்யா பாறையில் இருந்து துங்கபத்ரா ஆற்றில் குதித்து நீச்சலடித்து வெளியே வர முயன்றார்.
ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை. சிறிது நேரத்தில் அனன்யா தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். அந்த காட்சி நண்பர்களை கண்கலங்க வைத்தது. மூன்று நாட்களாக அனன்யாவை தேடும் பணி நடந்தது. துங்கபத்ரா அணையில் இருந்து 3000 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்ததால் அவரது உடலை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறைக்கப்பட்டது. மூன்று நாட்கள் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அனன்யாவின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
