“ரீல்ஸை யாரும் கேவலமாக நினைக்கக் கூடாது; அது ஊடகத்தின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிதான்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியுள்ளது சோஷியல் மீடியா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. மேடைகளில் நாடகங்கள், சினிமாக்கள் மற்றும் விடிய விடிய அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடந்த காலம் எல்லாம் இப்போது முடிந்துவிட்டது என்றும், ஒரு பெரிய விஷயத்தை வெறும் 30 நொடிகளுக்குள் மிகச் சுருக்கமாக மக்களுக்குச் சொல்லிப் புரியவைக்கும் பழக்கத்தை இந்த ரீல்ஸ்தான் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​மேலும் பேசிய அவர், ரீல்ஸாக மாறுவதற்காகவே சில சம்பவங்கள் நடப்பதாகவும், ஆனால் அவையெல்லாம் காலப்போக்கில் தானாகவே சரியாகிவிடும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அரசியல் நிலவரம் குறித்துப் பேசுகையில், “எங்களைப் பொறுத்தவரை ராகுல் காந்திதான் நாட்டின் பிரதமர் வேட்பாளர்; அதேபோல் தமிழ்நாட்டில் முதலமைச்சராகத் தொடர்ந்து விஜய் நீடிக்க வேண்டும், மக்களுக்கு நல்லாட்சியைத் தர வேண்டும்” என்று தனது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்தார்.

​தொடர்ந்து தவெக உடனான கூட்டணி குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த மாணிக்கம் தாகூர், “எங்களை நம்பி வந்தவர்களுக்குத் தங்கள் உயிரைக் கொடுத்துக் காப்பாற்றுவதுதான் காங்கிரஸ் கட்சியின் பரம்பரை குணம்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ரீல்ஸ் குறித்த அவரது புதுமையான பார்வையும், தமிழக அரசியலில் காங்கிரஸ் மற்றும் தவெக கூட்டணி தொடர்பான அவரது வெளிப்படையான பேச்சுக்களும் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.