தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் தான் அடுத்த பிரதமர் என்று அக்கட்சியினர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வரும் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறிய கருத்து political வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக கட்சியினரின் இந்த விருப்பத்தையும் கூச்சல்களையும் யாரும் “சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என அவர் அதிரடியாகக் கூறியுள்ளார்.

​செய்தியாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே இயங்கக்கூடிய ஒரு கட்சி, திடீரென உடனடியாகப் பிரதமர் பதவியைப் பெற்றுவிட முடியும் என்ற வாய்ப்பு இந்தியா போன்ற பரந்த ஜனநாயக நாட்டில் இல்லை என்று சுட்டிக்காட்டினார். ஒரேயொரு மாநிலத்தில் மட்டுமே பலம் கொண்ட கட்சி உடனடியாக நாட்டின் பிரதமராகி விடலாம் என்பது தவெக கட்சியினரின் வெறும் ஆசையாக மட்டுமே இருக்க முடியும் தவிர, நடைமுறை அரசியலுக்கு அது சாத்தியமில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

​ஏற்கெனவே விஜய் பிரதமர் வேட்பாளர் என்ற பேச்சுக்குக் காங்கிரஸ் மேலிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என எச்சரித்துள்ள நிலையில், தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்தின் இந்த கருத்து தவெக தலைமைக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய்யைப் பிரதமர் நாற்காலியில் அமர்த்தத் துடிக்கும் தவெகவினரின் கனவுக்கு, கூட்டணிக் கட்சிகளே அடுத்தடுத்து ஆப்பு வைத்து வருவது தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.