ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அகில இந்திய புண்ணிய தளங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராடவும் குவிந்துள்ளனர்.

அதேபோல் தீர்த்தக்கிணறுகளில் புனித நீராடிய பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சன்னதி பிரகாரத்தில் இருந்து மூன்றாம் பிரகாரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனையடுத்து நடராஜர், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், அம்பாள் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளிலும் சாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் இருந்தனர். இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் முடிந்த நிலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நேற்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடுவதற்காக வந்திருந்தனர். இதனால் அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.