உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் நடந்த ராமலீலா நாடகத்தின் போது, ராவணன் வேடமிட்ட சுனில் குமார் என்பவரின் கண்ணில் அம்பு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது. ராமர் வேடமிட்ட நைதிக் பாண்டே எய்த அம்பு, ராவணனின் கிரீடத்தைத் தாக்க வேண்டியதற்குப் பதிலாக சுனில் குமாரின் நேராக கண்ணைத் தாக்கியதில் கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

விபத்து நடந்தும், நாடகத்தை நடத்திய ராம்சனேகி சிங் மற்றும் ராமர் வேடமிட்ட கலைஞர் ஆகிய இருவரும் மருத்துவ உதவி செய்ய முன்வரவில்லை என்றும், பண உதவி கேட்டபோது ஜாதியைச் சொல்லி திட்டி மிரட்டியதாகவும் சுனில் குமார் குற்றம் சாட்டியுள்ளார். சுமார் இரண்டு மாத போராட்டத்திற்குப் பிறகு, சுனில் குமாரின் புகாரின் அடிப்படையில் தற்போது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அமைப்பாளர் மற்றும் ராமர் வேடமிட்டவர் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. கலையின் பெயரால் ஒரு மனிதரின் வாழ்வாதாரமான கண்ணையே பறித்துவிட்டு, அவருக்கு உதவாமல் அவமதித்த இந்தச் செயல் அங்கிருப்பவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.