மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ரோஹித் பவாரின் தனி உதவியாளர் அஜித் தசாவதாரேவின் சிறுமி மகள் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ருய் பகுதியில் உள்ள சாய் கணேஷ் நகரில் வீட்டுக்கு அருகிலேயே சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் உடனடியாக அங்கு சென்று விசாரணையைத் தொடங்கினர். சிறுமியின் மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்துக்கு முந்தைய இரவு சிறுமிக்கும் அவரது தாயாருக்கும் இடையே ஏதோ ஒரு விஷயம் தொடர்பாக சிறிய தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி வீட்டை விட்டு வெளியே சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்குத் திரும்பாததால் குடும்பத்தினர் பதற்றமடைந்தனர். இதையடுத்து போலீஸ் நிலையத்தில் சிறுமி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. குடும்பத்தினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், மறுநாள் காலை வீட்டின் அருகிலேயே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் மரணம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தடயங்களைச் சேகரித்தனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன. சிறுமியின் மரணம் எப்படி நிகழ்ந்தது, அவர் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் என்ன நடந்தது என்பது குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது குடும்பத்தினர் மற்றும் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த ரோஹித் பவார் பாராமதிக்கு நேரில் சென்று போலீஸ் அதிகாரிகளை சந்தித்து விசாரணை நிலவரத்தை கேட்டறிந்தார். பின்னர் பாராமதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் சென்று மருத்துவர்களிடம் தகவல்களை கேட்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் மரணத்துக்கான உண்மையான காரணம் என்ன, சம்பவம் எப்படி நடந்தது என்பவை விசாரணை முடிந்த பின்னரே தெரியவரும் என ரோஹித் பவார் தெரிவித்துள்ளார். தற்போது போலீஸார் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.