ராணுவ வீரர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து இந்திய ராணுவம் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இனி வீரர்கள் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் அதில் எதையும் பதிவிடவோ (Post), லைக் செய்யவோ அல்லது கமெண்ட் செய்யவோ அனுமதி இல்லை. தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கும், விழிப்புணர்வுக்காகவும் மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசப் பாதுகாப்பு மற்றும் ரகசியத் தகவல்கள் கசிவதைத் தவிர்க்கவே இத்தனை காலமும் கட்டுப்பாடுகள் இருந்தன.
தற்போதுள்ள இளைஞர்களுக்கு ஸ்மார்ட்போன் ஒரு அத்தியாவசியத் தேவையாக இருப்பதால், கட்டுப்பாடுகளுடன் கூடிய இந்த மாற்றத்தை ராணுவம் மேற்கொண்டுள்ளது. ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இது குறித்துக் கூறுகையில், எல்லைப் பகுதியில் பணியாற்றும் வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கவும், படிக்கவும் ஸ்மார்ட்போன் மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
“நாம் எதற்கும் உடனடியாக எதிர்வினை (React) ஆற்றாமல், நிதானமாகப் பதிலளிக்க (Respond) வேண்டும்” என்பதே வீரர்களுக்கு அவர் அளித்துள்ள அறிவுரை. தவறான செய்திகளை மேலதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டவும் வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நவீன காலத்திற்கு ஏற்ப வீரர்களின் தனிப்பட்ட தேவைகளையும், நாட்டின் பாதுகாப்பையும் சமநிலையில் கொண்டு செல்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
