ரக்ஷாபந்தனுக்கு ஒரு நாள் முன், ஆகஸ்ட் 5 ஆம் தேதி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரில் இருந்து நர்மதா எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டார் 29 வயதான அர்ச்சனா திவாரி.
உயர் நீதிமன்றத்தில் வக்கீல் பயிற்சி பெற்று வருவதோடு, சிவில் நீதிபதி தேர்வுகளுக்கும் தயாராகி வந்தார். அந்தப் பயணத்திற்காக அவர் பதிவு செய்திருந்த பெட்டி B3 – இடம் புக்கு செய்யப்பட்டு இருந்தது. அவரது பையில் ரக்ஷாபந்தனுக்கான ராக்கி, பரிசுகள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பரிசு பொருட்கள் இருந்தது. ஆனால் இரவு 10:16 மணிக்கு தனது அத்தைக்கு தொலைபேசியில் “போபாலுக்கு வந்து விட்டேன்” எனக் கூறியதற்குப் பிறகு அவர் மாயமாகிவிட்டார்.
மறுநாள் காலை ரயில் கட்னி தெற்கு நிலையத்தில் நின்றபோது, அவரது குடும்பத்தினர் காத்திருந்தும், அர்ச்சனா வெளியே வரவே இல்லை. அப்போது ரயிலில் இருந்தது அவரது பை மட்டும். அவரது கடைசி டிஜிட்டல் தடம் நர்மதா ரயில்வே பாலத்திற்கு அருகே செல்போன் பிங் மூலம் கண்டறியப்பட்டது.
இதையடுத்து கட்னி, இடார்சி உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. GRP காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “அந்த நாளில் மத விழா நடைபெற்றது. அவளைக் கடத்தியிருப்பது கடினம். அதே நேரத்தில், தானாகவே அவர் இறங்கி மற்றொரு இடத்திற்கு சென்றாரா என்ற சந்தேகமும் எழுகிறது,” என்றார்.
இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிபிஐ விசாரணையை குடும்பத்தினர் கோரியுள்ளனர். பல மாநிலங்களில் தேடுதல் வேட்டையை முன்னெடுத்துள்ள போலீசார், நர்மதா நதியில் கூட தேடுதல் பணிகளை தொடருகின்றனர். அர்ச்சனாவின் தகவலை அளிப்பவர்களுக்கு ₹51,000 பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதியாக வேண்டும் என்ற கனவுடன் பயணித்த அந்த பெண்ணின் காணாமற்போன மர்ம வழக்கு இன்று நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.
