ரஷியா மற்றும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் புதிய சட்ட மசோதா அமெரிக்க செனட் சபையின் முதற்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. ‘Lindsey O.Graham Sanctioning Russia and Iran Act of 2026’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா, ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வழிவகை செய்கிறது. அதன்படி, ரஷியாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகம் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய 5 நாடுகள் மீது 100% இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு இந்த மசோதா அதிகாரம் வழங்குகிறது. மேலும், ரஷியாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500% வரை வரி விதிக்கவும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போருக்குப் பிறகு, உலக அளவில் ரஷியாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில், இந்தச் சட்டம் இந்தியாவிற்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது 100% கூடுதல் வரி விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், இது இந்திய சுத்திகரிப்பு ஆலைகளையும் இருதரப்பு வர்த்தக உறவையும் கடுமையாகப் பாதிக்கும். ஒவ்வொரு 180 நாட்களுக்கும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி இந்தப் பட்டியலை ஆய்வு செய்து வரிகளை மாற்றியமைப்பார். எனினும், ரஷிய இயற்கை எரிவாயு இறக்குமதியைக் குறைத்து வரும் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவின் மருத்துவ மற்றும் அணு உலைத் தேவைகளுக்காக யுரேனியம் வாங்குவதற்கும் இந்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க-ஈரான் மோதல் தொடர்ந்துவரும் சூழலில், ஈரான் மீதான தடைகள் சட்டத்தை 2031ஆம் ஆண்டு வரை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும், ரஷிய எண்ணெயைக் கள்ளத்தனமாகக் கடத்தும் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இதில் சரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்க செனட் பார்வைக் கூடத்தில் நேரில் அமர்ந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கெடுப்பைப் பார்வையிட்டார். ஈரானுக்கு எதிரான தடைகளும் இதில் இடம்பெற்றுள்ளதால், அதிபர் டொனால்ட் டிரம்ப் இம்மசோதாவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இருப்பினும், அதிபருக்கு தன்னிச்சையாக வரி விதிக்கும் அளப்பரிய அதிகாரத்தைக் கொடுப்பது அமெரிக்க நுகர்வோரையும் நட்பு நாடுகளையும் பாதிக்கும் எனக் கூறி ஜனநாயகக் கட்சியினர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

செனட் சபையில் முதற்கட்ட வாக்கெடுப்பில் தேர்ச்சியடைந்துள்ள இந்த மசோதா, முழுமையான சட்டமாக மாறுவதற்கு இன்னும் சில தடைகளைக் கடக்க வேண்டியுள்ளது. செனட்டர் ஜான் ஓசாஃப் உட்பட 12 செனட்டர்கள் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர். தற்போது அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஆகஸ்ட் கோடைக்கால விடுமுறையில் இருப்பதால், செப்டம்பர் மாதத்திற்குப் பிறகே இம்மசோதா அங்கு தாக்கல் செய்யப்பட்டு இறுதி வாக்கெடுப்பிற்கு வரும். இந்தச் சட்டம் இறுதி வடிவம் பெறுமா அல்லது நட்பு நாடுகளின் அழுத்தத்தால் மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரசியல் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் எழுந்துள்ளது.