இந்திய ரயில்வே நிலையம் ஒன்றில், பயணிகள் குடிநீர் எடுக்கும் டேங்கில் குரங்குகள் குளிப்பதாக வெளியாகியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, தூய்மை மற்றும் குடிநீர் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வீடியோவில், ரயில்வே நிலையத்தின் மேல்தளத்தில் உள்ள திறந்தவெளி நீர்த்தேக்கத்தில் ஒரு குரங்கு குளிப்பதையும், மற்ற இரண்டு குரங்குகள் அருகில் அமர்ந்திருப்பதையும் காண முடிகிறது. இந்தக் காட்சி வேடிக்கையாகத் தோன்றினாலும், இது மிகவும் அசுத்தமானதாகவும், கவலை அளிப்பதாகவும் உள்ளது. பயணிகள் தினமும் இந்த நீரை பருகுவதால், இதுபோன்ற திறந்த டேங்குகளில் எவ்வளவு தூய்மை காக்கப்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

எக்ஸ் தளத்தில் @talk2anuradha என்ற பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “ரயில்வே நிலையத்தின் டேங்கில் குரங்குகள் குளிக்கின்றன. இப்படி ஒரு அசுத்தமான நிலை தனியார் கட்டடங்களில் நடக்குமா? இதனால் நோய் பரவினால் என்ன செய்வது? அரசுத் துறைகள் வேலை செய்யாமல், சம்பளம், லஞ்சம், ஓய்வூதியம் மட்டுமே பெறுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பயனர்கள் கோபத்துடன், “யாரும் பொறுப்பேற்கவில்லை, பெரிய விபத்து நடக்கும் வரை அனைவரும் அமைதியாக இருக்கின்றனர்” என்றும், “அடுத்த முறை ரயில் நிலையத்தில் குளிர்ந்த நீர் எடுக்கும்போது, அதில் குரங்கு குளித்திருக்கலாம் என்று எச்சரிக்கையாக இருங்கள்” என்றும், “இது முற்றிலும் அருவருப்பானது” என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.