இந்தியாவில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்யும் நிலையில் அவர்களின் பொருட்களும் ரயில்களில் பார்சலாக அனுப்பப்படுகிறது. தினந்தோறும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொண்டு செல்லப்படும் நிலையில் ரயில்களில் கொண்டு செல்லப்படும் பொருட்களை சில மர்ம நபர்கள் திருடும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை ரயிலில் இருந்து திருடினர். இந்த திருட்டுகளை தடுக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது புதிய திட்டம் ஒன்றினை கொண்டு வர இருக்கிறது.

அதாவது ரயில்களில் பார்சல் மூலம் அனுப்பப்படும் பொருட்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டத்தை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம் மொபைல் போனில் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில் பார்சல் இருக்கும் பெட்டியை திறப்பதற்கும் மூடுவதற்கும் ஓடிபி நம்பர் மிக முக்கியம். மேலும் ரயில்களில் உள்ள பொருட்களை யாரேனும் திருடுவதற்கு முயற்சி செய்தாலும் டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம் மூலம் ரயில்வே அதிகாரிகளுக்கு அது தெரிந்துவிடும். இதனால் இனி ரயில்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் பாதுகாப்பாக இருப்பதோடு திருட்டையும் கண்டிப்பாக தடுக்க முடியும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம் கூறிய விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது.