இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்வதால் பயணிகளின் வசதிக்காக அடிக்கடி புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஐ ஆர் சி டி சி இணையதள டிக்கெட் முன்பதிவில் ரயில் நிலைய ஊர் பெயர்களை எளிதில் கண்டறியும் வசதி தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்களிடம் மொபைல் போன் மற்றும் கணினி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் இணையதளம் மற்றும் செயலி மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள். தற்போது 82 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ ஆர் சி டி சி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் ரயில் நிலையங்களில் ஊர் பெயர்களை எளிதில் கண்டறியும் விதமாக மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 175 நகரங்களில் உள்ள 725 ரயில் நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னையை தேடும் போது சென்ட்ரல்,எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் காண்பிக்கும். அதனைப் போலவே முக்கிய நகரப் பெயரை தேடும் போதும் அங்குள்ள மற்ற ரயில் நிலையங்களையும் தெரிந்து கொள்ளலாம். இவற்றை இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யும் பயணிகள் பார்க்க முடியும் எனவும் பராமரிப்பு காரணங்களால் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கு பதிலாக மாற்று ரயில் நிலையத்தை காட்டியும் பயனருக்கு இது உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.