மத்திய பிரதேசம் இந்தூரில், 23 வயது இளம்பெண் ஸ்ரதா திவாரி வாழ்க்கையே தலைகீழாக மாறும் வகையில் நடந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2007ஆம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான ஜப் வி மெட் போலவே, சினிமாவை மிஞ்சும் கதைக்களத்தில் நடந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்த ஸ்ரதா
MIG காவல் நிலையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரதா, தனது காதலன் சர்தக்கை திருமணம் செய்வதற்காக கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால், திட்டமிட்டபடி ரயில்வே நிலையத்திற்கு வராத சர்தக், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, திருமணம் செய்ய விருப்பமில்லை என தெரிவித்து விட்டார். இதனால் மனம் உடைந்த ஸ்ரதா, அடுத்தது என்ன செய்வது என்ற குழப்பத்தில் அங்கே வந்த ரயிலில் ஏறி ரட்லம் சென்றார்.

ரயில் நிலையத்தில் முளைத்த புதிய காதல்
ரயில் நிலையத்தில் தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருந்த ஸ்ரதாவை, தாம் படித்த கல்லூரியில் எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்த கரண்தீப் எதிர்பாராத விதமாக சந்தித்தார். ஸ்ரதாவின் நிலையை அறிந்த கரண்தீப், வீடு திரும்புமாறு அறிவுறுத்தினாலும், “திருமணம் செய்வதற்காகவே நான் வீட்டை விட்டு வெளியேறினேன், அதைச் செய்யாமல் திரும்பினால் உயிரோடு இருக்க மாட்டேன்” என ஸ்ரதா கூறினார். பலமுறை சமாதானப்படுத்தியும் தோல்வியடைந்த நிலையில், கரண்தீப் நேரடியாகவே திருமணம் செய்ய முன்வந்தார். ஸ்ரதாவும் உடனடியாக அதனை ஏற்றுக்கொண்டார்.
பரிசுத்தொகை அறிவித்த தந்தை
இதையடுத்து, கரண்தீப் – ஸ்ரதா இருவரும் மஹேஷ்வர் மற்றும் மண்டலேஷ்வர் பகுதிகளில் திருமணம் செய்து கொண்டு மாண்ட்சார் சென்றனர். இதற்கிடையில், மகள் காணாமல் போனதால் கவலை அடைந்த தந்தை அனில், தகவல் தருபவர்களுக்கு ரூ.51 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், வழிப்போக்கர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஸ்ரதாவின் புகைப்படத்தை வீட்டின் வாசலில் தலைகீழாக தொங்கவிட்டார்.
வீடு திரும்பிய ஸ்ரதா – தந்தையின் நிபந்தனை
பின்னர் ஸ்ரதா தனது தந்தையை தொடர்பு கொண்டு, மாண்ட்சாரில் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அனில், ரயில் டிக்கெட் ஏற்பாடு செய்து மகளை வீடு திரும்புமாறு அறிவுறுத்தினார். ஓட்டல்களில் தங்க அனுமதி மறுக்கப்பட்டதால், அனில் கரண்தீபின் வங்கி கணக்கில் பணம் அனுப்பி, இருவரும் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்தார். திரும்பிய ஸ்ரதா நேரடியாக காவல்நிலையத்தில் நடந்த சம்பவங்களை வெளிப்படுத்தினார்.
10 நாட்கள் பிரித்து வைக்கத் திட்டம்
போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, மகள் வீடு திரும்பியதில் மகிழ்ச்சி அடைந்த தந்தை அனில், “அடுத்த 10 நாட்களுக்கு ஸ்ரதா, கரண்தீப்பை பிரித்து வைக்கிறேன். அதன் பிறகும் மகள் அவனுடனேயே வாழ விரும்பினால், அவர்களது திருமணத்தை ஏற்றுக் கொள்வேன்” என தெரிவித்துள்ளார். சினிமா கதையை மிஞ்சும் இந்த சம்பவம் தற்போது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
