சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரில் இருந்து மங்களூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. கடந்த 21-ஆம் தேதி காலை 8 மணிக்கு ரயில் ஊஞ்சலூரை கடந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்ததும் என்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார். இதனையடுத்து தண்டவாளத்தில் இருந்த கற்கள் அகற்றப்பட்ட பிறகு ரயில் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதுகுறித்து ரயில் எஞ்சின் டிரைவர் அளித்த தகவலின் படி ஈரோடு ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

சிறுவர்கள் சிலர் அந்த வழியாக சென்ற போது தண்டவாளத்தில் கற்களை வைத்திருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது, ரயில்வே தண்டவாளத்தில் விளையாட்டுத்தனமாக கற்களை வைப்பது குற்ற செயலாகும். இனிமேல் தண்டவாளத்தில் கற்கள் வைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தண்டவாளத்தில் கற்கள் வைக்கக் கூடாது என அந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.