கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் அவ்வளவு எளிதாக பத்து ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை. மக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். பொதுமக்களிடையே 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தியை போக்கும் விதமாக ரிசர்வ் வங்கி, அரசு மற்றும் சில வணிகர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுகுளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் நேற்று புதிதாக திறந்த பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தார். இதனை அறிந்த ஏராளமான மக்கள் 10 ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு பிரியாணி கடைக்கு வந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது, நான் சென்னையில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்தேன். அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்து பிரியாணி கடையை திறந்தேன். 10 ரூபாய் நாணயங்களை சில கடைகளில் வாங்க மறுக்கின்றனர். இதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கடையை திறந்த முதல் நாளே பத்து ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி வழங்கினேன். அதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றார்கள் என கூறினார்.