ரயிலில் பயணம் செய்யும் போது ஒரு குடும்பத்தினர் தங்களது இருக்கையிலேயே அமர்ந்து காய்கறிகளை நறுக்கி, ‘வெஜிடபிள் சாண்ட்விச்’ தயாரிக்கும் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு பெண் பிரட் துண்டுகளில் சட்னி தடவ, மற்றவர்கள் காய்கறிகளை வெட்டி சாண்ட்விச் தயார் செய்கின்றனர். இதைப் பார்த்த ஒரு தரப்பினர், ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுத்தம் கேள்விக்குறியாக இருப்பதால், இப்படி வீட்டிலிருந்தே பொருட்களைக் கொண்டு வந்து ஆரோக்கியமாகத் தயாரித்து உண்பதில் தவறில்லை என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். கார்ப்பரேட் உணவுகளை விட இது எவ்வளவோ மேலானது என்பதும் இவர்களின் வாதமாக உள்ளது.
Railways should ban such people, they are menace in public places pic.twitter.com/m5F0XBcEfD
— Ritik (@ThenNowForeve) February 8, 2026
இருப்பினும், மற்றொரு தரப்பினர் பொது இடங்களில் இது போன்ற செயல்கள் மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். “வீட்டில் சமைத்த உணவை எடுத்து வந்து சாப்பிடுவதில் சிக்கல் இல்லை, ஆனால் பொது இடத்தில் இப்படி காய்கறிகளை நறுக்கி உணவு தயாரிப்பது அநாகரிகமானது” என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். மூடிய ஏசி பெட்டியில் வெங்காயம் மற்றும் காய்கறிகளின் மணம் மற்றவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்றும், இது பொது ஒழுக்கத்திற்கு எதிரானது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு எளிய சாண்ட்விச் தயாரிப்பு வீடியோ இப்போது இணையத்தில் ‘சரி எது? தவறு எது?’ என்ற பெரிய விவாதமாக மாறியுள்ளது.
