கல்லூரிப் படிப்பை முடித்தும் சரியான வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த இளைஞர் ஒருவர், சோஷியல் மீடியாவில் கிடைத்த ஒரு சிறிய ஐடியாவைப் பிடித்து, விரல் நகங்களால் மனிதர்களுக்குச் சொரிந்துவிடும் விசித்திரமான தொழிலைத் தொடங்கி இன்று மாதம் ரூ.14 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டி வரும் சம்பவம் உலகளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

​சீனாவைச் சேர்ந்த 32 வயதான ஜாங் என்ற இளைஞர், பல நிறுவனங்களில் வேலை பார்த்தும் தனக்கேற்ற சரியான வேலைமையமைய அமையாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். அப்போது ஒருநாள் சோஷியல் மீடியாவில் பெண் ஒருவர் தனது கணவருக்கு விரல் நகங்களால் சொரிந்துவிடும் வீடியோவைப் பார்த்துள்ளார். அந்த வீடியோவின் கமெண்ட் பக்கத்தைப் படித்தபோது, “பணம் வாங்கிக் கொண்டு எங்களுக்கும் யாராவது இப்படிச் சொரிந்துவிட்டால் நன்றாக இருக்கும்” எனப் பலரும் பதிவிட்டிருந்ததைக் கண்டுள்ளார்.

​இந்தக் கமெண்ட்டைப் பார்த்தவுடன், “இதை ஏன் நாம் ஒரு தொழிலாகச் செய்யக்கூடாது?” எனச் சிந்தித்த ஜாங், கடந்த மே மாதம் தனது முதல் மசாஜ் கிளையைத் தொடங்கினார். மக்களிடம் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, ஒரே மாதத்தில் 2-வது கிளையையும் திறந்த அவர், தற்போது 10 கிளைகளுடன் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இதன்மூலம் மாதம் ரூ.14 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டி வரும் ஜாங், விரைவில் தனது நிறுவனத்தை 100 கிளைகளாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.