பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவி வரும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியும், அரசியல் ரீதியான பாகுபாடுகளும் அங்குள்ள மக்களைப் பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளன. கடுமையான மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு, வேலையில்லாத் திண்டாட்டம், இயற்கை வளங்களைச் சுரண்டுதல், இணைய முடக்கம் மற்றும் தேர்தல்களில் அகதிகளுக்கான இடஒதுக்கீடுக்கு எதிரான அதிருப்தி ஆகிய இந்த ஆறு முக்கிய காரணங்கள் அணு குண்டு போல வெடித்து மக்களிடம் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் பொதுமக்களை, பாகிஸ்தான் அரசு தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து ஒடுக்க நினைப்பது நிலைமையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. மக்களின் இந்த எழுச்சியை சகித்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் தலைமையிலான அரசு, அமைதியான முறையில் போராடிய சொந்த நாட்டு குடிமக்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தி கொடூரமான முறையில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இந்த வன்முறை அடக்குமுறையால் இதுவரை 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். தங்களின் சொந்த இயற்கை வளங்களை அனுபவிக்க முடியாமல் வஞ்சிக்கப்படும் PoK பகுதி மக்களின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம், பாகிஸ்தான் அரசின் சர்வாதிகாரப் போக்கை உலக அரங்கில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.