தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ், முதல்முறையாக நாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’ (DC) திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது ஆக்ஷன் பாணி படங்களால் ரசிகர்களைக் கவர்ந்த லோகேஷ் கனகராஜும், ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் படங்களுக்குப் பெயர்பெற்ற இயக்குநர் அருண் மாதேஸ்வரனும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாகக் களம் காண்கிறார்.

முழுக்க முழுக்க அதிரடி மற்றும் பழிவாங்குதல் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜுடன் இணைந்து நடிகைகள் வாமிகா கபி மற்றும் சஞ்சனா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் யூடியூபில் வெளியாவதற்கு முன்னதாக, பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில்  திரையிடப்பட்டது. இதற்காக லோகேஷ் கனகராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் இருவரும் பிரான்ஸ் சென்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிரைலர் காட்சிகளில் வன்முறை அதிக அளவில் இருப்பதால், தணிக்கைத் துறையினரால் இப்படத்திற்கு ‘ஏ’ (A Certificate) சான்றிதழ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிக விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.