தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஜெர்மனி நோக்கி நேற்று முன்தினம் லுப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது திடீரென 63 வயது நிரம்பிய பயணி ஒருவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட அவர் சிறிது நேரத்திலேயே ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

அவரை காப்பாற்றும் முயற்சியில் விமான பணியாளர்களும் மருத்துவரும் ஈடுபட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தனது கண்ணெதிரே கணவன் இறந்ததைப் பார்த்து அவரது மனைவி கதறி அழ சகப் பயணிகளும் பயத்தில் அலறியுள்ளனர். பின்னர் இறந்தவரின் சடலம் விமானத்தின் கேலரிக்குள் வைக்கப்பட்டு மீண்டும் விமானம் தாய்லாந்துக்கே திரும்பியது.

நேற்று காலை தாய்லாந்தில் தரை இறங்கிய விமானத்திலிருந்து சடலம் இறக்கப்பட்டு உரிய நடைமுறைகளுக்கு பின்னர் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. சக பயணி ஒருவர் கூறுகையில் விமானத்தில் ஏறும்போதே அவரது உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது. குளிரிலும் அவருக்கு வேர்த்து கொட்டியது இவ்வளவு மோசமான நிலையில் அவர் இருந்த போதும் விமானி எதற்காக விமானத்தை கிளப்பினார் என்பது புரியவில்லை என கூறியுள்ளார்.