அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈ ரான் தலைநகர் டெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்ட விளம்பரப் பலகை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெஹ்ரானின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினரின் புகைப்படங்களுக்குக் கீழே, அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டுள்ளது. ஈரான் அரசுத் தரப்பால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகை, அமெரிக்க அதிபரைக் குறிவைத்து நடத்தப்படும் மிகத் தீவிரமான மற்றும் தனிப்பட்ட தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சர்ச்சைக்குரிய விளம்பரப் பலகையில், “இரத்தத்திற்கு இரத்தம்” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. ஈரானின் மூத்த தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க, டிரம்பின் குடும்பத்தினருக்கு நேரடியாக விடுக்கப்பட்ட மிரட்டலாக இது பார்க்கப்படுகிறது.
இந்த விளம்பரப் பலகையில் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் அவர்களது ஐந்து பிள்ளைகளான இவான்கா டிரம்ப், டொனால்ட் டிரம்ப் ஜூனியர், எரிக் டிரம்ப், டிஃப்பனி டிரம்ப் மற்றும் பேரன் டிரம்ப் ஆகியோரின் படங்கள் சவப்பெட்டிகளுக்கு மேலே வரிசையாக இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உச்ச தலைவர் அலி கமேனி, அவரது மகள், மருமகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. டெஹ்ரானின் மற்றுமொரு முக்கியப் பகுதியான எங்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள வேறொரு விளம்பரப் பலகையில், டிரம்ப் ஒரு சவப்பெட்டியில் கண்கள் மூடப்பட்டு கிடப்பது போன்றும், அதற்கு கீழே “நாங்கள் டிரம்பைக் கொல்வோம்” என்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் காலமான மூத்த குடியரசுக் கட்சி செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் பெயரைக் குறிப்பிட்டு “அடுத்தது யார்?” என்ற வாசகமும் அச்சிடப்பட்டுள்ளது.
