தமிழக அரசியலில் “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த் ஏன் கடைசி நேரத்தில் அரசியலுக்கு வரவில்லை என்பது குறித்து இதுவரை பல காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள தகவல் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று உண்மையாகவே விரும்பினார். ஆனால், திமுக குடும்பம் அவருக்குப் பல மிரட்டல்களைக் கொடுத்து, அவரை அரசியலுக்கு வராமல் தடுத்தது” என மிகக் கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இதன் காரணமாகவே அவர் அரசியலைக் கைவிட்டுவிட்டு, தற்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பிலேயே நடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் என்றும் அவர் சாடியுள்ளார்.

​மேலும், ரஜினிகாந்துக்கு இல்லாத அந்த ‘மனவலிமை’ நடிகர் விஜய்யிடம் இருப்பதாக ஆதவ் அர்ஜுனா புகழ்ந்து தள்ளியுள்ளார். “எவ்வளவு மிரட்டல்கள் வந்தாலும், தனிப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் விஜய் அஞ்சவில்லை; பயந்துகொண்டு வீட்டுக்குள் முடங்கிவிடவில்லை. கரூரில் செருப்பு வீசப்பட்ட பிறகும், திருவாரூரில் கூட்டத்தைப் பார்த்து திமுக அஞ்சிய பிறகும் விஜய் தனது அரசியல் பயணத்தில் உறுதியாக இருக்கிறார்” என அவர் பேசியுள்ளார். திமுகவின் வஞ்சக அரசியலை முறியடிக்க விஜய்யால் மட்டுமே முடியும் என அவர் பேசியுள்ள இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி திமுக – தவெக இடையே பெரும் வார்த்தைப் போரை உருவாக்கியுள்ளது.