முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங், மீண்டும் சர்ச்சைக்குரிய பேச்சை வெளியிட்டுள்ளார். தனது மகனின் முன்னாள் அணி வீரர்கள் பெரும்பாலானோர் ‘முதுகில் குத்துபவர்கள்’ என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
விராட் கோலி மற்றும் எம்எஸ். தோனி போன்றவர்கள், யுவராஜ் தங்கள் இடத்தை அபகரித்துவிடுவாரோ என்ற பயத்தால் அவருக்கு சரியான ஆதரவு அளிக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். யுவராஜுக்கு உண்மையான நண்பராக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே எனவும் யோகராஜ் வலியுறுத்தினார்.
“எல்லோரும் பயந்தார்கள் – யுவராஜ் சிறந்த வீரர்!”
இன்சைட் ஸ்போர்ட்ஸ் ஊடகத்துக்கு பேசிய யோகராஜ், “வெற்றி, பணம், பெருமை – இவற்றுக்கெல்லாம் நட்பே இருக்காது. யுவராஜ் சிங் எப்போதும் தனித்துவமானவர். அவர் கடவுளின் அருளால் படைக்கப்பட்ட சிறந்த வீரர். அதனால் எல்லோரும், ‘அவர் என் இருக்கையை அபகரிப்பாரோ’ என்ற பயத்தில் இருந்தார்கள். தோனி முதல் பலரும் அதேபோல் நினைத்தார்கள்” என்று தெரிவித்தார்.
யுவராஜ் சிங் – இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத சாதனைகள்
யோகராஜ் சிங், தனது மகன் எவ்வாறு முன்கூட்டியே ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதைக் குறித்தும் அடிக்கடி பேசிவந்துள்ளார். யுவராஜ், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை 2007 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக படைத்தார்.
மேலும், 2011 உலகக்கோப்பையில் ஒன்பது போட்டிகளில் 362 ரன்கள், நான்கு அரைசதங்கள், ஒரு சதம் மற்றும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி “தொடரின் சிறந்த வீரர்” என்ற பட்டத்தை பெற்றார். இதுவே அவரது கேரியரின் உச்சமாக அமைந்தது.
