புதிதாக அரசியல் கட்சி துவங்கியிருக்கும் விஜய்க்கு திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்..

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சியின் பெயரை இன்று அறிவித்துள்ளார்.. நடிகர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை மூலம் அறிவித்துள்ளார். அதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கட்சியின் பெயரை அறிவித்தவுடன் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து  அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.

இதனிடையே டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்துள்ளார் அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். இதையடுத்து நடிகர் விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள்   ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதிய அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜய்க்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்திய ஜனநாயகத்தில் யாருக்கு வேண்டுமானாலும் அரசியல் கட்சி ஆரம்பிக்க உரிமை இருக்கிறது. நடிகர் விஜய் அவர்கள் வந்து அந்த  முடிவை எடுத்து இருக்கிறார். அவருக்கு நம் அனைவரின் சார்பாக பாராட்டுக்கள், அவருடைய மக்கள் பணி சிறக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.