ஆஸ்கார் என்ற பூனை, மரணத்தை முன்கூட்டியே கணிக்கும் வினோதமான திறனால் மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள ஒரு முதியோர் பராமரிப்பு மையத்தில் வசிக்கும் இந்தப் பூனை, சாதாரண செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டது.
ஆனால், எந்த நோயாளி இன்னும் சில மணிநேரங்களில் உயிரிழக்கப் போகிறாரோ, அந்த நோயாளியின் அறைக்குள் நுழைந்து அவர் அருகில் சென்று ஆஸ்கார் தூங்கத் தொடங்கும். வியக்கத்தக்க வகையில், இந்தப் பூனை யாருக்கு அருகில் படுக்கிறதோ, அவர்கள் அடுத்த நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குள் இறந்துவிடுகிறார்கள்.
மேலும் மருத்துவர்களாலும் கண்டறிய முடியாத மரணத் தறுவாயை இந்தப் பூனை துல்லியமாகக் கண்டறிவது அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. ஆஸ்கார் பூனையின் இந்தத் துல்லியமான கணிப்பு இதுவரை 50-க்கும் மேற்பட்ட முறை உண்மையாகியுள்ளது. இது ஏதோ ஒரு தற்செயலான நிகழ்வு என்று முதலில் கருதப்பட்டாலும், தொடர்ச்சியாக இது நிகழ்ந்தபோது மருத்துவர்கள் இதை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினர்.
இதனால் சில சமயங்களில் உயிருக்குப் போராடும் நோயாளிகளை விட, ஆரோக்கியமாகத் தோன்றும் நோயாளிகளின் அருகில் ஆஸ்கார் சென்று அமர்வதும், பின்னர் அவர்கள் மரணமடைவதும் நிகழ்ந்துள்ளது. ஒரு நபர் இறக்கும் போது உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களின் வாசனையை இந்தப் பூனை நுகரக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இருப்பினும், மருத்துவ அறிவியலுக்கு அப்பாற்பட்ட இந்த ‘மரணத் தூதுவன்’ பூனை, இன்றுவரை ஒரு மர்மமான அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.
