2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 28) மாலை வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்தப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்.
அதிமுக தரப்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் வேட்பாளர் தேர்வுகள் அசுர வேகத்தில் நடந்து வரும் நிலையில், திமுகவின் இந்தப் பட்டியல் அறிவிப்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா அல்லது அதிரடியாகப் புதுமுகங்கள் களமிறக்கப்படுவார்களா என்பதுதான் இப்போது அறிவாலய வட்டாரத்தின் ஹாட் டாபிக்.
இந்த வேட்பாளர் பட்டியல் வெளியீட்டை முன்னிட்டு, முக்கிய நிர்வாகிகள் மற்றும் சீட் எதிர்பார்ப்பில் இருக்கும் வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில், திமுக போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கும் பலமான வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் ஸ்டாலின் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளாராம்.
“வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை” என்ற ஒற்றை இலக்கோடு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இன்று மாலை வெளியாகும் இந்த அறிவிப்பு, தேர்தல் களத்தில் மற்ற கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
