தமிழக அரசியலில் பெரும் தொழிலதிபராக அறியப்படும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் குடும்பத்தினர், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெவ்வேறு கட்சிகளின் சார்பில் களமிறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், சமீபத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிலையில், அவருக்கு லால்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜுனா, விசிகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்து, அக் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார். அவர் வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடக்கூடும் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரி அரசியலிலும் மார்ட்டின் குடும்பத்தின் தாக்கம் எதிரொலிக்கிறது. மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், அங்கு ‘லட்சிய ஜனநாயக கட்சி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார்.

மேலும் அவருக்கு காமராஜ் நகர் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தர்பூசணி சின்னத்தில் அவரது கட்சி போட்டியிடுகிறது. இவ்வாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு அரசியல் கூட்டணிகளின் கீழ் தேர்தல் களத்தில் நிற்பது மக்களிடையே பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஈர்த்துள்ளது.