தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சசிகலா நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நீடித்த இந்தச் சந்திப்பில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான புதிய கூட்டணி குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் ராமதாஸை கூட்டணியில் இணைக்கத் தயக்கம் காட்டி வரும் நிலையில், சசிகலாவுடன் இணைந்து ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சியில் ராமதாஸ் இறங்கியுள்ளாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இந்தச் சந்திப்பின் பின்னணியில் மற்றொரு அதிர்ச்சித் தகவலும் கசிந்துள்ளது. பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் (அன்புமணி) இடையே நிலவும் கருத்து வேறுபாடு காரணமாக, அன்புமணி முன்னிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராகத் தனது பலத்தைக் காட்ட ராமதாஸ் திட்டமிட்டுள்ளாராம். அதேபோல், சசிகலா ஏற்கனவே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் (TVK) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், ராமதாஸ் – சசிகலா சந்திப்பு ஒரு பலமான மூன்றாவது அல்லது நான்காவது அணியை நோக்கித் தமிழக அரசியலைத் தள்ளியுள்ளது. வட மாவட்டங்களின் செல்வாக்கு மிக்க ராமதாஸும், தென் மாவட்டங்களில் பிடி வைத்திருக்கும் சசிகலாவும் கைகோர்த்தால், அது பெரிய கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
