மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர், இந்தியர்களின் சமையலறை வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வருவது தடைபட்டுள்ளதால், இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையைச் சமாளிக்க, வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் சிலிண்டர் கிடைக்காமல் திணறி வருகின்றன.

​இந்தச் சூழலில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளார். “தற்போதைக்கு மருத்துவமனைகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை; இருப்பினும் வருமுன் காப்பதாக அடுத்த வாரம் முதல் விறகு அடுப்புகள் மற்றும் எலக்ட்ரிக் அடுப்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், நோயாளிகளுக்குத் தங்கு தடையின்றி பால், பழம், ரொட்டி போன்ற எளிமையான உணவுகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த ‘விறகடுப்பு’ திட்டம் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.