தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையான பிரியங்கா மோகன், தனது சினிமா பயணத்தின் தொடக்கத்தில் ஒளிப்பதிவு ஜாம்பவான் பி.சி. ஸ்ரீராம் குறித்து தனக்கு ஏற்பட்ட அறியாமையை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் அறிமுகமான பிரியங்கா மோகன், தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘டாக்டர்’, ‘டான்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’, தனுஷுடன் ‘கேப்டன் மில்லர்’, ஜெயம் ரவியுடன் ‘பிரதர்ஸ்’ என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தற்போது சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படத்திலும் அவர் நடித்து வருகிறார்.

அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தனது ஆரம்பகால சினிமா வாய்ப்பு குறித்து பிரியங்கா மோகன் பேசியதாவது, ஒருமுறை என்னை பி.சி. ஸ்ரீராம் அலுவலகத்திற்கு வரச் சொன்னார்கள். அப்போது எனக்கு அவர் யார் என்றே தெரியாது. அவரது அலுவலகத்திற்குச் சென்று அமர்ந்திருந்தேன். அங்கே சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த திரைப்பட போஸ்டர்களைப் பார்த்தபோது, அவை அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் என்பதை உணர்ந்தேன்.

நான் எங்கே இருக்கிறேன், யாரைச் சந்திக்க வந்திருக்கிறேன் என்பது புரியாமல் உடனே கூகுள் (Google) செய்து பார்த்தேன். அப்போதுதான் அவர் இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் என்பது எனக்குத் தெரிந்தது. சரியாக நான் கூகுள் செய்து முடித்த நேரத்தில் அவர் உள்ளே வந்துவிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “என்னை பார்த்ததும் பி.சி. ஸ்ரீராம் சார், ‘இந்தப் பெண்ணுக்குள் ஏதோ ஒரு திறமை இருக்கிறது, இவரை ஒப்பந்தம் செய்யலாம்’ என்று கூறினார். பின்னர் என்னை சில புகைப்படங்களும் எடுத்தார்,” என்று அந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும் அனைவருக்கும் பிடித்தமான பல கிளாசிக் படங்களுக்குப் பின்னால் இருந்த மேதையை, கூகுள் செய்து தெரிந்துகொண்டதாகப் பிரியங்கா மோகன் எதார்த்தமாகப் பேசியுள்ள இந்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.