கென்யாவின் சாவோ வனவிலங்குப் பகுதியில், ஒரு அரிய மற்றும் வினோதமான விபத்தில், பெரிய யானை ஒன்றின் வலது தந்தம் எதிர்பாராதவிதமாக அதன் துதிக்கையை  குத்தி, துவாரமிட்டு நிலைத்ததால், உணவு உண்ணவோ, தண்ணீர் அருந்தவோ, ஏன், சரியாக மூச்சு விடவோ முடியாமல் அந்த யானை மூன்று நாட்களுக்கும் மேலாக கடும் வேதனையுடன் தவித்து வந்தது.

யானை தனது இடது நாசியைத் துதிக்கையால் தடவியபோது சமநிலை தவறி விழுந்திருக்கலாம், அப்போது தந்தம் துதிக்கையைக் குத்தி அதில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் கருதுகின்றனர். இந்தத் தகவல் கிடைத்ததும்,  நடமாடும் கால்நடைப் பிரிவு உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்தது.

<a href=”http://

“>

அங்கு மயக்க ஊசி செலுத்தி யானையைச் சமன்படுத்திய மருத்துவர்கள் குழு, தந்தத்தில் சிக்கியிருந்த துதிக்கையை கவனமாக விடுவித்தது. அதன்பின் காயத்தை சுத்தம் செய்து, மருந்துப் பூச்சுகள் அளித்தனர். இந்த காயம் குணமாகி யானை விரைவில் முழு ஆரோக்கியத்துடன் மீண்டு வரும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு வினோதச் சம்பவம் என்றும், உடனடிச் சிகிச்சை யானையின் உயிரைக் காப்பாற்றியதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.